விஜய் சேதுபதி இல்லை என்றால் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தை இழந்திருப்பேன் - இயக்குநர் சீனு ராமசாமி!

Vijay sethupathy seenu ramasamy


விஜய் சேதுபதி என்னை சந்திக்காமல் இருந்தாலும், நிச்சயமாக ஒரு நடிகராகி இருப்பார் எனவும், அதே நேரத்தில் அவர் இல்லையென்றால் தென்மேற்கு பருவக்காற்று படத்தை இழந்திருப்பேன் எனவும் இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
 இயக்குநர் சீனு ராமசாமி கூடல் நகர் படத்தின்‌ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தென்மேற்கு பருவக்காற்று படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் விஜய் சேதுபதி திரை வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.பின்னர் நீர்ப்பறவை, தர்ம துரை, மாமனிதன் என மண் வாசனையுடன் மனித உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்தும் படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது ஏகன் என்ற புதுமுக நடிகர் நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தை இயக்கி வருகிறார்.

Seenu ramasamy

சீனு ராமசாமி இயக்குநர் மட்டுமின்றி கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உடையவர். இவரது கவிதை தொகுப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் சீனு ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்' நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.‌ இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.‌ இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், "என்னை கதாநாயகனாக மாற்றிய என் ஆசானின் நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி.

Seenu ramasamy

நான் உப்பு சிறு வயதில் வாங்கிய போது 1 படி 1 ரூபாயாக இருந்தது. அப்போது அவருக்கு ஒரு நாள் சம்பளம் 15 ரூபாய் இருக்கும், அதை எல்லாம் ரொம்ப அழகாக எழுதி இருக்கிறார். இந்த நூலில் சில கவிதைகள் புரிந்தது. ஒரு சில கவிதைகள் கேள்விகளை எழுப்பி புரிய வைப்பது போல் இருந்தது. என் வாழ்க்கையில் வந்த ஆசான்களில் இயக்குநர் சீனு ராமசாமி முக்கியமானவர். எளிய மனிதர்களால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதை இப்போதும் இந்த கவிதை வெளியீட்டு விழா மூலம் புரிய வைத்துள்ளார்" என்று பேசினார்.இதனைத்தொடர்ந்து பேசிய இயக்குநர் சீனு ராமசாமி, "தமிழ்நாட்டில் கவிதை நூல்களை வாங்க யாருமில்லை. காது குத்து, கல்யாணம் போன்ற விசேஷங்களில் மொய் எழுதுவார்கள். அது போல் ஒரு கவிஞர் நூல் எழுதி வெளியிடும் போது மற்ற கவிஞர்கள் அதனை வாங்க வேண்டும். இதை ஏன் பதிப்பாளர்கள் கொண்டு வர முன்வர கூடாது என கேள்வி எழுப்பினார். நலிந்த திரைக் கலைஞர்களுக்கு உதவி வழங்குவது போல ஒவ்வொரு நலிந்த பதிப்பாளருக்கும் அரசு மானியம் தர வேண்டும். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கையாக வைக்கிறேன் என்றார்.

நடிகர் விஜய் சேதுபதியே ஒரு கவிதை. அவர் கவிதை எழுதாத ஒரு கவிஞன். அவரோடு வாழ்ந்தவன், அருகில் இருந்து பார்த்தவன் என்பதால் சொல்கிறேன். விஜய் சேதுபதியின் கண்களில் குடி கொண்ட கருணை, அன்பு, இந்தியாவில் எந்த நடிகரிடமும் கிடையாது. விஜய் சேதுபதி என்னை சந்திக்காமல் இருந்தாலும், நிச்சயமாக ஒரு நடிகராகி இருப்பார். ஆனால் அவர் இல்லா விட்டால், தென்மேற்கு பருவக்காற்று படத்தை இழந்திருப்பேன். இவர் உண்மையில் நடிகரா அல்லது அந்த கிராமத்தை சேர்ந்தவரா என்று மாமனிதன் திரைப்பட விழாவில் ( லண்டனில்) ஒருவர் கேட்டதாகவும் சீனு ராமசாமி கூறினார்.

Share this story