25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சேது’ ரீ-ரிலீஸ்.. விக்ரம் ரசிகர்கள் குஷி..!!

விக்ரம் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சேது’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சேது’. இந்தப்படம் மூலமாகத்தான் பாலா இயக்குநராக அறிமுகமானார். ‘சேது’ படத்தில் விக்ரமுடன் சிவகுமார், அபிதா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கந்தசாமி தயாரிப்பில் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்திருந்தார்கள். இந்தப்படம் வெளியானபோது முதலில் பெரிதாக ரசிக்கப்படவில்லை. பின்பு ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி மறுவெளியீடு செய்த போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.
பின்னர் சேது திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட ‘சேது’ தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்தது. தற்போது இப்படத்தினை புதிய பொலிவுடன் மாற்றி மறுவெளியீடு செய்ய படக்குழு முடிவுசெய்துள்ளது. இதற்காக படத்தினை தரம் உயர்த்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10-ம் தேதியுடன் இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு அடுத்து விக்ரம் மற்றும் பாலா ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.,