பாலியல் வன்கொடுமை வழக்கு; ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!
ஜூனியர் நடன இயக்குநர் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூனியர் நடன இயக்குநர் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில், நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். ஜானி மாஸ்டரிடம் உதவி நடன இயக்குநராக பணிபுரிந்த பெண் ஒருவர் கடந்த 2020ஆம் ஆண்டு வேலை தொடர்பாக மும்பை சென்ற போது, தனக்கு ஜானி மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து வெளியில் கூறினால் தன் கரியருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டியதாக சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து நார்சங்கி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அப்பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்பட்ட போது மைனர் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜானி மாஸ்டரை போலீசார் தேடி வந்தனர். ஜானி மாஸ்டர் தலைமறைவான நிலையில், சைபராபாத் போலீசார் கோவாவில் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், மூத்த காவல் அதிகாரி கொடுத்த தகவலின் பேரில், ஜானி மாஸ்டர் கோவாவில் கைது செய்யப்பட்டு, அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் ஹைதராபாத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு நீதிமன்றம் ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது ஜானி மாஸ்டர் சன்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜானி மாஸ்டரின் மனைவி இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்” என கூறியுள்ளார். பிரபல நடன இயக்குநராக தமிழ், தெலுங்கு சினிமாத் துறையில் வலம் வந்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.