பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் நிவின் பாலியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
மலையாளத் திரையுல நடிகர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இன்று (செவ்வாய்க்கிழமை) நடிகர் நிவின் பாலியிடம் விசாரணை நடத்தியது.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் ஹோட்டலில் வைத்து நடிகர் நிவின் பாலி தனக்கு பாலியல் துன்புறத்தல் கொடுத்ததாக கொத்தமங்கலத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிவின் பாலி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்திருந்தது.
தன் மீது கொடுக்கப்பட்ட புகார் போலியானது என்று மாநில காவல்துறை தலைவரிடம் நிவின் பாலி தாக்கல் செய்த எதிர்மனுவில் உள்ள வாக்குமூலத்தையும் சிறப்பு புலனாய்வுக் குழு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அதில், தன் மீது குற்றம்சாட்டிய பெண் குறிப்பிட்ட தேதியில் தான் கொச்சியில் ஒரு படபிடிப்பில் இருந்ததாக நிவின் தெரிவித்திருந்தார். எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் பட வாய்ப்பு தருவதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது புகாரை பதிவு செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர், அதனை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊன்னுக்கல் (Oonnukal) காவல் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஏ.கே.சுனில் என்ற தயாரிப்பாளரின் பெயரும் உள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ஸ்ரேயா என்ற பெண்ணின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஸ்ரேயா, படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து அங்குள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நிவின் பாலி உள்ளிட்ட 6 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.