விஜய்யிடம் தனிப்பட்ட முறையில் பேசியதை பகிர்ந்த ஷாம்
விஜய் மில்டன் இயக்கத்தில் முதல் வெப் தொடராக உருவாகியுள்ள தொடர் ‘கோலி சோடா ரைசிங்’. இத்தொடரில் கோலி சோட முதல் பாகத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்திருக்க இவர்களுடன் சேரன், ஷாம், அபிராமி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்தொடர் நாளை(13.09.2024) டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ள நிலையில், தொடரின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஷாமை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சந்தித்தோம். அப்போது படத்தை பற்றி பல விஷயங்களை பகிர்ந்த அவர், இடையே விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், “விஜய்க்கு குறைந்தபட்சம் ரூ.500 கோடி வசூல் வரும்” என சொன்ன அவர், உடனே தொகுப்பாளரை பார்த்து, “சினிமாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அரசியலுக்கு வரும் விஜய்க்கு நீ என்ன பண்ணுவ... நீதான்யா ஓட்டு போடனும்... போடுவிய்யா நீ” என்று சிரித்தபடி கேட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “பத்து வருஷத்திற்கு முன்னாடி ஒரு நடிகனாக விஜய், டாப் பொஷிசனுக்கு வர வேண்டும், நம்பர் 1ஆக இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பார். ஆனால், இப்போது அதையெல்லாம் சாதித்த பிறகு அதை வேண்டாம் என்று சொல்லுவது மிகவும் கடினமானது.
எந்த ஒரு சாமானியனும் இதை செய்ய முடியாது. நானாக இருந்தால் சின்ன விஷயத்தைக் கூட விட்டுகொடுக்க மாட்டேன். அதுக்குதான் இவ்வுளவு நாள் கஷ்டப்பட்டேன் அதை விட்டு போகனுமா? என்றெல்லாம் தோன்றும். ஆனால் விஜய் 30 வருடமாக உழைத்து நட்சத்திர அந்தஸ்தை பெரும்போது, அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர் அரசியலுக்கு வந்ததை நான் மதிக்கிறேன். அவரிடம் நிறைய விஷயங்கள் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். அதனால் சொல்கிறேன் அவர் ரசிகர்கள்தான் அவருக்கு எப்போதும் உயிர். அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு ரசிகர்கள் நிறைய ஆதரவு கொடுத்தார்கள். இதனால் ரசிகர்களுக்கு எதாவது பண்ணவேண்டும் என்று சொல்லுவார். அந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாகவும் கவனமாகவும் இருக்கிறார்” என்றார். வாரிசு படத்தில் விஜய்யும் ஷாமும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.