விரைவில் திரைக்கு வரவுள்ள சண்முகபாண்டியனின் படை தலைவன்!
இயக்குநர் அன்பு இயக்கத்தில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள 'படை தலைவன்' திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். இவரது மறைவு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின், விஜயகாந்துடன் தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வந்தார். ஆனால் அப்படம் தேர்தல், விஜயகாந்த் மறைவு ஆகிய காரணத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 'படை தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
வால்டர் படத்தை இயக்கிய வி.ஜே.கம்பைன்ஸ் சார்பில் தாஸ் பிக்சர்ஸ் நிறுவனமும், சுமிட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மேலும், ராஜு காளிதாஸ் இணை தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் படை தலைவன். இப்படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ.செந்தில் குமார் வெளியிட உள்ளார். படத்தின் இசை வெளியீடு, படம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.