அறுவை சிகிச்சைக்காக அமேரிக்கா செல்லும் சிவராஜ்குமார் ; கண்கலங்கியபடி பேட்டி

shivaraj kumar

ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். பின்பு விஜய்யின் 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்தது. பின்பு அது கைகூடாமல் போய்விட்டது. இவர் நடிப்பில் கடைசியாக  ‘பைரதி ரணகல்’ என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியாகியிருந்தது. இதையடுத்து உத்தரகாண்டா, 45, பைரவனா கோனே பாட மற்றும் ராம் சரணின் 16வது படம் ஆகியவை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சமீப காலமாக அவருக்கு உடலில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக ‘பைரதி ரணகல்’ பட புரொமோஷனில் உடலில் பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெறவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டார். பின்பு மற்றொரு பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப், சிவ ராஜ்குமாரை அவரது இல்லத்தில் சந்தித்து சிகிச்சை நல்ல படியாக அமைய வாழ்த்து தெரிவித்தார். 

இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க சென்றுள்ளார். அதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து கண்கலங்கியபடி பேசினார். அவர் பேசுகையில், “மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் வருகிற 24 ஆம் தேதி என்னுடைய அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டிருக்கிறது. நான் மருத்துவரிடம் பேசினேன். அவர் எதற்கும் கவலை பட வேண்டாம் என்றார். கடந்த 2 நாட்களில் இதயத்துடிப்பு, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை என நாங்கள் எடுத்த அனைத்து டெஸ்ட்டுகளிலும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. அது எனக்கு தைரியத்தை தந்துள்ளது. அமெரிக்காவில் ஒரு மாதம் தங்கவுள்ளேன். அடுத்த மாதம் 26ஆம் தேதி இந்தியாவுக்குத் திரும்புவேன். என்னுடன் எனது மனைவி கீதா, இளைய மகள் நிவேதா ஆகியோர் வருகிறார்கள்” என எமோஷ்னலாக பேசினார்.
 

Share this story