மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்?
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கும் ’இட்லி கடை’ படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் ’இட்லி கடை’ படத்தில் அருண் விஜய், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி தனுஷ் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’குபேரா’. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்கவுள்ளார். அன்பு செழியன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான ’அமரன்’ திரைப்படம் இந்த ஆண்டு மாபெரும் வெற்றிப்படமாக வசூல் சாதனை படைத்தது. அமரன் தீபாவளிக்கு வெளியாகி தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிப்படமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான '3' படத்தில் நடித்தனர். இப்படம் வெளியான போது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தனுஷ், ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் அனிருத் இசையமைத்த முதல் படமான '3' பட பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.