புயலால் தள்ளிப் போன சித்தார்த் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
செவன் மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற படங்களை இயக்கிய ராஜசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா உள்ளிட்ட பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இப்படம் நவம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. உலகமெங்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் பெற்றிருக்க ஓ.டி.டி. உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
இப்படம் நவம்பர் 29ஆம் தேதியில் இருந்து தள்ளிப் போகவுள்ளதாக தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ சமீபத்தில் தெரிவித்திருந்தார். அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாக படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் கூறிய நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 13ஆம் தேதி இப்படம் வெளியாகும் சாமுவேல் மேத்யூ அறிக்கை வெளியிட்டுள்ளார்.