“மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களை நாம் ஆதரிக்க வேண்டும்” - சிம்பு

Vazhai

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்கு சிறுவர்கள் மற்றும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 


இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இணைந்து வெற்றிமாறன், மிஷ்கின், நெல்சன், ராம், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல இயக்குநர்களும் த்ருவ் விக்ரம், அனுபமா பரமேசுவரன், உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகளும் கலந்து கொண்டனர். மேலும் சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் காணொளி வாயிலாக படத்தை பாராட்டி பேசினர்.   Vazhai

அந்த வகையில் சிம்பு காணொளி வாயிலாக பேசுகையில், “இயக்குநர் ராம் என்னுடைய நண்பர். அவர் மாரி செல்வராஜ் பற்றி நிறைய சொல்வார். அவருடைய வளர்ச்சி உண்மையிலே ஆச்சரியப்பட வைக்கிறது. மெயின்ஸ்ட்ரீமில் கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்கும், இது போன்ற ஒரு வித்தியாசமான படங்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் மாரி செல்வராஜ் தொடர்ந்து அவருடைய படங்களை மெயின்ஸ்ட்ரீமிலும் ரசிக்க வைக்கிறார். கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். 


வாழை பொறுத்தவரைக்கும் ஒரு எளிமையான படம் தான். ஆனால் படத்திற்காக ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். அவ்வுளவு வலி உள்ளே இருக்கிறது. அதோடு இந்த படம் அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் எனச் சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாக ஒரு சிறந்த படம். கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிக்கும் படி இருக்கிறது. படம் குறித்து நிறைய நான் சொல்ல முடியாது. படம் பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும் . இது போன்ற நல்ல இயக்குநர்கள் வித்தியாசமான படைப்புகளோடு வரும் போது கண்டிப்பாக நாம் ஆதரிக்க வேண்டும்” என்று படக்குழுவை பாராட்டினார்.  

Share this story