பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. தூக்க மாத்திரை சாப்பிட்டதை உறுதிப்படுத்திய மருத்துவர்கள்

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மறைந்த நடிகரும் பாடகருமான டி.எஸ்.ராகவேந்திராவின் மகள் கல்பனா தமிழில் பிரபல பாடகியாக உள்ளார். தமிழில் தாஜ்மகால் படத்தில் இடம்பெற்ற ‘திருப்பாச்சி அருவாளை’, பிரியமான தோழி படத்தில் இடம்பெற்ற ‘பெண்ணே நீயும் பெண்ணா’, மழை படத்தில் இடம்பெற்ற ‘நீ வரும்போது’ உள்ளிட்ட பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். இவர் ஹைதராபாத்தின் நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி, இது குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார்.
கல்பனாவின் தொலைபேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குடியிருப்புவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீஸார் கல்பனாவின் வீட்டுக் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். தற்போது அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாடகி கல்பனா சுயநினைவுக்கு திரும்பியாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பாடகி கல்பனா தூக்க மாத்திரை சாப்பிடத்தையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.