ரசிகைகளுக்கு உதட்டில் ‘முத்தம்’ - சர்ச்சையில் பாடகர் உதித் நாராயணன்

பிரபல பாடகர் உதித் நாராயணன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை முத்தமிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் அவர், ‘டிப் டிப் பர்ஸா பானி’ என்ற பாடலை பாடும்போது, சில பெண்கள் செல்ஃபி எடுக்க அருகில் வருகிறார்கள். அப்போது, அவர் சிலருக்கு கன்னத்திலும், ஒருவருக்கு உதடுகளிலும் முத்தம் கொடுக்கிறார். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து பலரும் இது ஒழுக்கமற்ற மற்றும் அநாகரிகமான செயல் என உதித் நாராயணை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சிலர் இது உண்மையான வீடியோ அல்ல. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. அப்படி இல்லை என்றால், அவர் திரைத்துறையில் புரிந்த சாதனைகள் மற்றும் மரியாதைகள் என அனைத்தையும் இழந்து விடுவார் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில், ரசிகையை உதட்டில் முத்தமிட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை எதுவும் பேசாமல் இருந்த உதித் நாராயண் தற்போது மவுனம் கலைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ரசிகையை முத்தமிட்டது ஒரு தன்னிச்சையான நிகழ்வு. நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். அவர்கள் என் மீது அன்பை பொழியும்போது, நான் என்னுடைய கைகளை மடக்கி வைத்துக்கொள்வேன். மேடையில் இருக்கும்போது நான் அவர்களை கைகூப்பி வணங்குவேன்' என்றார்.
உதித் நாராயண் தமிழ், தெலுகு, கன்னடம், பெங்கால், ஒடியா, மலையாளம் என பல மொழிகளில் பிரபலமான பாடல்களை பாடியுள்ளார். நான்கு தேசிய விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.