சிக்கலில் சிவாஜி வீடு... நீதிமன்றத்தை நாடிய நடிகர் பிரபு...!

நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் 'ஈசன் ப்ரொடக்ஷன்' என்ற நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் 'ஜெகஜால கில்லாடி' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட தயாரிப்பு பணிக்காக ஈசன் ப்ரொடக்ஷன், 3.74 கோடி ரூபாய் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த கடன் ஒப்பந்தத்தின் பொழுது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நீதி மன்றம் சென்றது. அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்தியஸ்தர் கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உரிமைகளை பெற்றுக் கொண்டு கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் மீதி தொகையை ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திடமே வழங்க வேண்டும் எனவும் மத்தியஸ்தர் தெரிவித்திருந்தார். இந்த உத்தரவின் படி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் கேட்ட பொழுது படம் இன்னும் முடிவடையவில்லை என ஈசன் ப்ரொடக்சன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பிரபு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சிவாஜி கணேசன், உயிருடன் இருக்கும் போதே, அன்னை இல்லம் வீட்டை எனக்கு உயில் எழுதி வைத்துவிட்டார். இதற்கு எனது சகோதரரும், சகோதரிகளும் ஒப்புக் கொண்டதை அடுத்து எனது பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதனால் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளராகிய நான் இருக்கும் நிலையில் சகோதரர் ராம்குமார் தொடர்புடைய நிதி பிரச்சனையில் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எனது பெயரில் அன்னை இல்லம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சகோதரர் ராம்குமாருக்கு எந்த உரிமையும் இல்லாததால், வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.