சொன்ன தேதிக்கு முன்னரே வெளியாகிறதா ‘மாவீரன்’... சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல் !
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படம் ரிலீஸ் தேதிக்கு முன்னரே வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சொன்ன தேதிக்கு முன்னரே படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதே என கூறப்படுகிறது.