வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. உறுதி செய்த இயக்குனர்
அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதை வெங்கட்பிரபு உறுதி செய்திருக்கிறார். இந்த ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘தி கோட்’ படம் தான் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.
அதில் அடுத்ததாக அஜித் படம், சிவகார்த்திகேயன் படம் என்றெல்லாம் கூறப்பட்டது. தற்போது வெங்கட்பிரபு அளித்த பேட்டியொன்றில் தனது அடுத்த படம் குறித்து, “எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு படம் இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக இணைய வேண்டியதாக இருந்தது. ஆனால், அது ‘தி கோட்’ படமாக மாறிவிட்டது. இப்போது சத்யஜோதி நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ண வேண்டும். அது தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.
கதையின் ஐடியாவை இறுதி செய்துவிட்டோம். திரைக்கதை, காட்சியமைப்புகள் உள்ளிட்டவைக்கான பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு இந்த கதையின் ஐடியா தெரியும். அதே மாதிரி இன்னொரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கதையாக எழுதி முடித்துவிட்டு பின் நாயகன் யார் என்பதை முடிவு செய்யலாம் என இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு. இதன் மூலம் சத்யஜோதி நிறுவனம் - சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு மூவரும் இணைந்து படம் பண்ணுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.