இந்தியில் அமீர்கான் தயாரிப்பில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

sk

நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் யூடியூப் சேனல் பேட்டியில், தான் நடிக்கும் முதல் இந்தி படத்தை அமீர்கான் தயாரிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார். பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். தனியார் யூடியூப் சேனலில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் தான் நடிக்கும் படங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் மனம் திறந்து பேசியுள்ளார்.

தற்போது நடித்து வரும் SK23 குறித்தும், சுதா கொங்குரா இயக்கத்தில் நடித்து வரும் SK25 குறித்தும் நெறியாளர் கேட்டதற்கு, “முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு 90 சதவிதம் முடிந்துவிட்டது. அவர் சல்மான் கான் நடிக்கும் ’சிகந்தர்’ பட வேலைகளில் தற்போது பிஸியாக உள்ளார். அப்பட வேலைகள் முடிந்த பிறகு என் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும். இப்படத்தில் ஓபனிங் சாங் ஆகியவை இல்லாமல் சற்று வித்தியாசமான கதையாக இருக்கும்.



சுதா கொங்குரா இயக்கும் SK25 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கியமாக ஜெயம் ரவி இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். நான் கல்லூரி காலத்தில் அவரது படங்களை பார்த்துள்ளேன். ஒரு சீனியர் நடிகராக அவருடன் நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.



இதனைத்தொடர்ந்து திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சி குறித்து கேட்ட போது, “ஒரு படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் நான் புகைப் பிடிக்க தயார். அந்த கேரக்டர் புகைப்பிடிப்பதற்கான தேவை இருக்க வேண்டும். ஆனால் ஒரு ஓபனிங் சீனுக்காகவோ, அல்லது பில்டப் காட்சிக்காகவோ நான் புகைப்பிடிக்க விரும்பவில்லை. அதுவும் ஒரு நெகடிவ் கதாபாத்திரம் என்றால் புகைப்பிடிப்பதில் பிரச்சனை இல்லை” என கூறியுள்ளார்.


 


இதனைத்தொடர்ந்து இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததா என நெறியாளர் கேள்விக்கு, தான் அமீர்கானை சந்தித்ததாகவும், அவர் நான் இந்தி படத்தில் நடித்தால் அதனை தயாரிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இந்தியில் நல்ல கதை வரும் பட்சத்தில் கண்டிப்பாக அவரிடம் கூறுவேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ’அமரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு அதிக வசூல் குவித்த படங்களில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Share this story