’ஜருகண்டி’ பாடல் குறித்து ஹைப் ஏற்றும் எஸ்.ஜே.சூர்யா!
கேம் சேஞ்சர் படத்தின் பட்ஜெட் 400 கோடிக்கு மேல் இருக்கும் எனவும், ஜருகண்டி பாடல் பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும் எனவும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். 'கேம் சேஞ்சர்' படத்தில் ஜரகண்டி பாடல் பிரமாண்டமாக இருக்கும் என நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.
தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ராம் சரண் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “இப்படத்திற்கு 400 முதல் 500 கோடி வரை செலவாகியுள்ளது. ஷங்கர் சார் என்றால் பிரம்மாண்டம். கேம் சேஞ்சர் படத்தில் ஜருகண்டி என்ற பாடல் உள்ளது. அப்பாடல் லீக்கானதால் படக்குழு வேறு வழி இல்லாமல் ரிலீஸ் செய்தது. நேற்று தான் அந்த பாடல் வீடியோவை பார்த்தேன்.
ஆடியன்ஸ் கொடுக்கும் பணம் அந்த பாடலுக்கே முடிந்துவிடும், அந்தளவிற்கு பிரம்மாண்டம். ஒரு முறை தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு, ஜருகண்டி பாடலுக்காக மக்கள் ஐமேக்ஸ் சென்று பார்க்க வேண்டும். கியாரா அத்வானிக்கு தயாரிப்பாளர் கொடுத்த சம்பளம் அந்த ஒரு பாடலுக்கே அடங்கும். இந்த மொத்த பொங்கலும் மக்களுக்கு போனஸ் தான்” என கூறியுள்ளார்.
இந்நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் 'இந்தியன் 3' திரைப்படத்தை ஷங்கர் முடித்துத் தரக் கோரி, கேம் சேஞ்சர் படத்திற்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருதரப்பும் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கேம் சேஞ்சர் திரைப்படம் தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வெளியாகும் என நம்பப்படுகிறது.