‘SK 25’ பட பூஜை வீடியோ இணையத்தில் வைரல்!
SK 25 படத்தின் பூஜை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். தற்காலிகமாக SK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது கடந்த 1965ல் நடைபெற்ற இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அதன்படி இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.
இந்த பூஜையில் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா, ஜெயம் ரவி, அதர்வா, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.