SK 25 படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியீடு என அறிவிப்பு

sk 25

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்தியன் நடித்து வரும் 'SK25' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை அறிவிப்பு டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நாளை மாலை 4 மணி அளவில் அறிவிப்பு டீசர் வெளியாகும் என்பதே அந்த முக்கிய அறிவிப்பு என இன்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. மிகுந்த பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படமானது நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகும். அதனால் படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவும் தணிக்கை செய்யப்பட்டு, அதன் சான்றிதழும் இணையத்தில் வைரலாகி வந்தது. அந்த சான்றிதழிலும் பராசக்தி என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.



பழம்பெரும் நடிகரான சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பராசக்தி. தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று. இந்நிலையில் இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கக்கூடாது என சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் சில நாட்களுக்கு முன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதனால் எதுவும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்று வெளியான அறிவிப்பு போஸ்டரில் சிவகார்த்திகேயன் தீ எறியும் பெட்ரோல் குண்டை கையில் வைத்திருக்கிறார். தீ பரவட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி முதல் அந்த தீ பரவும் என வைத்திருக்கிறார்கள். இதனால் நாளை வெளியாகவிருக்கும் அறிவிப்பு டீசரில் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என அதிகமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதேபோலத்தான் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ இன் தலைப்பு நாளைய தீர்ப்பு என இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் படத்தின் தலைப்பு ஜனநாயகன் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயனின் 25வது படமானதால் 2026 பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

 
 

Share this story