புன்னகை அரசி சினேகா பிறந்தநாள்... திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து...

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசியாக ஜொலித்த நடிகை சினேகா இன்று தனது பிறந்தாளை கொண்டாடி வருகிறார்.
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட நடிகை சினேகா, துபாயில் பிறந்து வளர்ந்தவர். தமிழகத்துக்கு அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்த பிறகு 'இங்கணே ஒரு நிலாபக்ஷி' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 2001ம் ஆண்டு வெளியான 'என்னவளே' படம் தான் முதலில் வெளியானது. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் சினேகா. ஆனந்தம் படத்தில் குடும்ப பெண்ணாக அழகால் ரசிகர்களை கவர்ந்த சினேகாவின் 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்' என்ற பாடல் அந்த ஆண்டில் வெளியான வெற்றிப்பாடல்களில் ஒன்றாகவும். அப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய அடையாளமாக அமைந்ததை அடுத்து, அவருக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
இயக்குநர் சிகரத்தின் பார்த்தாலே பரவசம், கமல் ஜோடியாக வசூல்ராஜா எம்பிபிஎஸ், பம்மல்.கே.சம்பந்தம், சூர்யாவின் ஜோடியாக "உன்னை நினைத்து", விஜய் ஜோடியாக "வசீகரா", ஷ்யாம் ஜோடியாக "ஏய் நீ ரொம்ப அழகா இருக்க", ஸ்ரீகாந்த் ஜோடியாக 'ஏப்ரல் மாதத்தில்', சேரனின் "ஆட்டோகிராப்", "பிரிவோம் சந்திப்போம்" என பல ஹிட் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அது மட்டுமின்றி அஜித், தனுஷ், அர்ஜுன், ஜீவன், சிம்பு, லாரன்ஸ் உள்ளிட்ட நடிகர்களுடனும் நடித்துள்ளார். தங்கர்பச்சனின் "பள்ளிக்கூடம்" திரைப்படம், சினேகாவின் நடிப்பு முதிர்ச்சியை காட்டியது. தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம், மலையாள படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்தார். புதுப்பேட்டை, அச்சமுண்டு அச்சமுண்டு உள்ளிட்ட படங்களில் துணிச்சலான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது படங்களில் நடித்து வரும் சினேகா, தற்போது விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்று பிறந்தாள் கொண்டாடும் சினேகாவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.