பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி.. திட்டமிட்டபடி வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’..!
‘கேம் சேஞ்சர்’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழகத்தில் எந்தவொரு சிக்கலுமின்றி வெளியாகிறது. ‘இந்தியன் 3’ தயாரிப்பு பிரச்சினைகளை முன்வைத்து ‘கேம் சேஞ்சர்’ வெளியீட்டுக்கு பிரச்சினை உருவானது. லைகா – ஷங்கர் இருவருக்கும் இடையே எந்தவொரு சமரச நிலையும் எட்டாத காரணத்தினால், ‘கேம் சேஞ்சர்’ வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்தது. இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டுவிட்டது.
என்னவென்றால், ‘இந்தியன் 3’ படத்துக்கு பேசப்பட்ட சம்பளத்தைக் குறைக்க ஷங்கர் சம்மதம் தெரிவித்துவிட்டார். மேலும், இதர விஷயங்கள் அனைத்துமே அமெரிக்காவில் இருந்து கமல் திரும்பியவுடன் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் சில காட்சிகளை மீண்டும் படமாக்க லைகா சம்மதம் தெரிவித்தாலும், இன்னொரு பாடல் படப்பிடிப்புக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், ஷங்கரோ அப்பாடல் கண்டிப்பாக படமாக்கப்பட வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்தியன் 3’ பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதால், தமிழகத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் வெளியீட்டு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. திரையரங்குகள் ஒப்பந்தம் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இப்படத்தினை ராக்போர்ட் நிறுவனம் வெளியிடுகிறது.ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம், கைரா அத்வானி, அஞ்சலி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது.