"நான் இவ்வளவு உயர காரணம் இயக்குனர் வெற்றிமாறன் "-சூரி பேச்சு
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள படம், ‘மண்டாடி’. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஐமேக்ஸ் திரைகளிலும் படம் வெளியாகிறது. சூரி, சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ், மிதுன் ஜெய்சங்கர் நடித்துள்ளனர்.
மீனவர்களுக்கு இடையே நடக்கும் படகு போட்டியை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது
சூரி பேசும்போது, ‘நான் இவ்வளவு உயர காரணம் இயக்குனர் வெற்றிமாறன். அவர் ஊன்றிய விதை இன்று செடியாக முளைத்திருக்கிறது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கடுமையாக உழைத்திருக்கிறார். படகு போட்டியில், படகில் இருக்கும் 6 பேரை வழிநடத்துபவர் மண்டாடி. படத்துக்காக ரிஸ்க் எடுக்கவில்லை. ரிஸ்க்கையே படமாக எடுத்திருக்கிறோம். 2 மாதங்களாக கடலில் படப்பிடிப்பு நடத்தினோம்.
ராமநாதபுரம் சுற்றுவட்டார மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். நான் இங்கு நிற்பதற்கு முக்கிய காரணம், எனது குடும்பம். இங்கு எனது அம்மா வந்திருக்கிறார். அவர்தான் எனக்கு சாமி’ என்றார். பிறகு சூரியின் தாயார் பேசியபோது அழுதார். இச்சம்பவம் பார்வையாளர்களின் மனதை நெகிழவைத்தது.

