பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சூரி!

வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம் மிகவும் பிரபலமானார் நடிகர் சூரி.
இதனை அடுத்து, அவரது பெயர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து, அவரது நகைச்சுவையில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் அடித்தன. குறிப்பாக சிவகார்த்திகேயன் - சூரி காம்போ திரையரங்கில் மக்களை குதூகலிக்கச் செய்தது.
அதிலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய மூன்று படங்களும் வெகுஜன மக்களை மிகவும் கவர்ந்தது. இவ்வாறு தனது நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னை மெருகேற்றிக் கொண்ட சூரி, குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அவ்வப்போது சில இடங்களில் நடித்து வந்தார்.
அப்படி அவரது நடிப்பில் வெளியான உடன்பிறப்பே எனும் படத்தில் சூரியின் கதாபாத்திரம் மிகவும் நெருக்கமானதாக அமைந்தது. தொடர்ந்து சூரிக்கு பல முன்னணி நாயகர்களின் படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது.
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கிறார் என்ற செய்தியும், அதிலும் கதாநாயகனாகவே நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெற்றிமாறன் சூரியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன என்பதை குறித்து ரசிகர்கள் அந்த படத்தில் தேடினர்.
அது சரியாகவே அமைந்தது என்பது போல் ஆகிவிட்டது, விடுதலை படத்தின் முதல் பாகத்தில் சூரியின் நடிப்பு உச்சத்தை தொட்டது. இதனை அடுத்து, அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பல்வேறு விருதுகளை குவித்து வரும் கொட்டுக்காளி என்ற திரைப்படத்திலும் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல கதையம்சங்களைக் கொண்ட திரைக்கதையில் நடிப்பதில் சூரி ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் தான் பிரபல இயக்குனர் ஒருவருடன் சூரி கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி புரூஸ்லீ, விலங்கு வெப் தொடர் ஆகியவற்றை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜனுடன் சூரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளிவரவில்லை.
இதனிடையே, நேற்று லாஸ் வீகாசில் இருந்தவாறு புகைப்படம் ஒன்றை சூரி பதிவிட்டு இருந்தார். அதில் மாஸ் லுக்காக காட்சியளித்த சூரியக்கு கமெண்ட்கள் மற்றும் லைக்குகள் பறந்து வருகின்றன.