காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விமானத்தை பரிசாக அளித்த சுகேஷ் சந்திரசேகர்...!

காதலர் தினத்தையொட்டி பாலிவுட் நடிகையும், காதலியுமான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விமானத்தை பரிசாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்தது, ஆள்மாறாட்டம் செய்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழில் அதிபர் ஷிவிந்தர் சிங்குக்கு ஜாமீன் வாங்கி தருவதாக சிறையிலேயே நட்பாக பேசியுள்ளார். மேலும், அவரின் மனைவியான அதிதி சிங்கிடம் ரூ.200 கோடியை சுகேஷ் சந்திரசேகர் மோசடி செய்தாக கூறப்படுகிறது. இந்த வழக்கிலும் கைதி சுகேஷ் சிறையில் உள்ளார்.
இதனிடையே நடிகை ஜாக்குலினுடன் நெருக்கமான நட்பில் சுகேஷ் சந்திரசேகர் இருந்துள்ளார். அப்போது அவருக்கு கோடிக்கணக்கில் பரிசுகளையும் கொடுத்துள்ளார். மேலும், சிறையில் இருந்து கொண்டே ஜாக்குலினுக்கு ரூ.10 கோடி வரை பரிசுப் பொருட்களை சுகேஷ் வாங்கிக் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் நேற்றைய காதலர் தினத்தின்போது நடிகை ஜாக்குலினுக்கு ஜெட் விமானத்தை பரிசாக கொடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் அந்த தனியார் ஜெட் விமானத்தில் காதலியின் பெயரையும் சுகேஷ் சந்திரசேகர் பொறித்துள்ளார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்பது ஆங்கிலத்தில் ஜேஎஃப் என்று ஆங்கிலத்தில் விமானத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு அழகான காதல் கடிதத்தையும் சுகேஷ் சந்திரசேகர் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தனியார் ஜெட் விமானத்தை எனது காதலியான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு அனுப்புகிறேன். இந்த விமானம் குற்றச்செயல்களால் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கவில்லை.
அடுத்த பிறவி என்று எனக்கு ஒன்று இருந்தால், அதில் ஜாக்குலின் பெர்னாண்டஸின் இதயமாகப் பிறக்க விரும்புகிறேன். அவருக்குள் நான் "துடித்துக் கொண்டே இருக்க" விரும்புகிறேன். நீ என் காதலியாக இருப்பதால் நான்தான் இந்த உலகின் மிகவும் அதிர்ஷ்டசாலியான மனிதன். ஜாக்குலின் பெர்னாண்டஸ் போன்ற மிகவும் அழகான மற்றும் அற்புதமான பெண் காதலியாக கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலி.
பேபி, நீ எப்போதும் வேலை மற்றும் படப்பிடிப்பு விஷயங்களுக்காக உலகம் முழுவதும் பறந்து கொண்டிருப்பாய், இப்போது இந்த ஜெட் விமானத்துடன், உன் பயணம் உன் விருப்பப்படி மிகவும் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.