சுந்தர்.சி இயக்கத்தில் ரவிதேஜா..?
சுந்தர்.சி இயக்கத்தில் ரவிதேஜா நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
‘அரண்மனை 4’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். தற்போது ‘கேங்கர்ஸ்’ என்னும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் சுந்தர்.சி. இதில் வடிவேலு, கத்ரீன் தெரசா, பக்ஸ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கவுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ரவிதேஜா நடிக்கவுள்ள தெலுங்கு படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி.
இதுதொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் முழுக்கதையினையும் கேட்டுவிட்டு ஒப்பந்தத்தில் ரவிதேஜா கையெழுத்திடுவார் என்கிறார்கள். சுந்தர்.சி, முதலில் இந்தக் கதையை இங்குள்ள நாயகர்களிடம் கூறியிருக்கிறார். பெரிதாக யாரும் ஆர்வம் காட்டாத காரணத்தினால் தெலுங்கில் ரவிதேஜாவை வைத்து இயக்க பணிகளைத் தொடங்கி இருக்கிறார்.