சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டார்.. ரீ ரிலீஸுக்கு தயாராகும் ‘படையப்பா’!

padayappa

ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’படையப்பா’ திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘படையப்பா’. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படையப்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனங்கள் முதல் அவர் அணிந்த காஸ்டியூம்கள் வரை அனைத்தும் பிரபலமானது.

'போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்', 'என் வழி தனி வழி', 'வயசானாலும் ஸ்டைலும் அழகும் உன்ன விட்டு போகல' ஆகிய வசனங்கள் இன்று வரை ரஜினிகாந்தின் பிரபல வசனங்களாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. ரஜினிகாந்த் படங்களில் 90ஸ் கிட்ஸ்களுக்கு பாட்ஷாவிற்கு பிறகு படையப்பா பலருக்கு ஃபேவரைட் படமாக உள்ளது.


மேலும் படையப்பா படத்தில் ஹீரோ கதாபாத்திரம் அளவிற்கு ரம்யா கிருஷ்ணனின் நெகடிவ் ககதாபாத்திரம் பிரபலமடைந்தது. ரம்யா கிருஷ்ணன் மிரட்டலான நடிப்பினால் அவரது நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரை பேசப்படுகிறது. தற்போது இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் படங்கள் இயக்குவதில்லை என்றாலும், ரஜினிகாந்திற்கு அவர் இயக்கிய முத்து, படையப்பா ஆகிய படங்கள் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட்டான படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படுவதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது. இது சூப்பர்ஸ்டார் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னதாக கடந்த டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் ’தளபதி’ ரீரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல வெற்றித் திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் ரீரிலீஸ் செய்யப்பட்ட ’கில்லி’ திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. அதேபோல் வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், பாபா உள்ளிட்ட படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

Share this story