என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக மிரட்டும் சூப்பர் ஸ்டார்... 'வேட்டையன்' டிரெய்லர் வெளியானது!

vettaiyan

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. வேட்டையன் படத்தின் மனசிலாயோ, hunter varaar ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளியான கூட்டத்தில் ஒருத்தன், ஜெய்பீம் ஆகிய படங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மையமாக கொண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் டி.ஜே.ஞானவேல் ரஜினியை இயக்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வேட்டையன் டீசரில் போலீசார் என்கவுண்டர் பற்றிய வசனங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மோதிக்கொள்ளும் காட்சிகள் வரவேற்பை பெறும் என படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சமீபத்திய ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தான் இயக்குநர் டி.ஜே.ஞானவேலிடம் வேட்டையன் திரைப்படம் தனது ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வேட்டையன் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கொலையாளியை என்கவுன்ட்டர் செய்ய நினைக்கும் போலீசாக ரஜினி எதிர்கொள்ளும் சவால்களை மையமாக டிரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அமிதாப் பச்சன் ரஜினிக்கு உயர் அதிகாரியாக டிரெய்லரில் தோன்றுகிறார். delayed justice is justice denied உள்ளிட்ட வசனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வேட்டையன் படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Share this story