சினிமாவில் நடிக்க சுரேஷ் கோபிக்கு மத்திய அரசு அனுமதி
மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் அஜித்தின் ‘தினா’, ஷங்கரின் ‘ஐ’, விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இவர் ‘ஒற்றக்கொம்பன்’ உட்பட சில மலையாளப் படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படங்களில் நடிப்பதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் என நம்புவதாக சில மாதங்களுக்கு முன் சுரேஷ் கோபி கூறியிருந்தார். ஆனால் படங்களில் இவர் நடிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. இந்நிலையில் இப்போது இவருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் வரும் 29-ம் தேதி ‘ஒற்றக்கொம்பன்’ படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.