ஆந்திராவில் தொடங்கிய ‘கங்குவா’ ஷூட்டிங்... முக்கிய காட்சிகளை படமாக்க திட்டம் !

சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 5-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஏராளமான அனிமேஷன் காட்சிகள் இடம்பெற உள்ளது. இந்த படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கற்பனை கலந்த கதைக்களம் கொண்ட படமாகும். இரு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
பல கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் வேகமாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் ராஜ முந்திரி கடற்கரை பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. அதில் சூர்யா, பாபு டயால், ஜெகபதி பாபு உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ப்ரீயட் பகுதி காட்சிகள் படமாக்கப்படும் நிலையில் படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் நிலையில் விரைவில் போஸ்ட் பிரொடக்ஷன் பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.