மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது சூர்யாவின் கங்குவா...!
சூர்யா, பாபி தியோல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 3டி தொழில் நுட்பத்திலும் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் கோவா, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள கங்குவா படத்திற்காக நடிகர் சூர்யா மூன்று ஆண்டுகாலம் கடினமாக உழைத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 11,500 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கங்குவா தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. அதற்கு பின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் சூர்யா படம் வெளியாவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் கங்குவா படத்தின் ரீலீஸ் கோலாகலமாக வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.