ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் ‘கங்குவா’... எந்த பிரிவில் தெரியுமா?
சூர்யாவின் கங்குவா திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் கங்குவா. சூர்யாவின் 42வது படமான இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இவருடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் கார்த்தி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படமானது இரண்டாம் பாகத்திற்கான லீடுடன் முடிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தை ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது என்பது திரை உலகின் தலைசிறந்த விருதாகும். இந்த விருதினை பெறுவது ஒவ்வொரு சினிமா கலைஞர்களின் கனவாக இருக்கிறது. வருடந்தோறும் சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் பெஸ்ட் பிக்சர்- Best Picture என்ற பிரிவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டிருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை தந்துள்ள நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.