சூர்யாவின் ‘கங்குவா’ ரூ.2,000 கோடி வசூலிக்கும்: தயாரிப்பாளர் நம்பிக்கை
சூர்யாவின் ‘கங்குவா’ படம் ரூ.2,000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதுவரை டீஸர் மற்றும் ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.
#Kanguva gross report will be released officially and KEG is expecting 2000 crores worldwide! pic.twitter.com/JTAYFFdJSk
— Naveen (@NaveenSuriya_FC) October 14, 2024
இதனிடையே, ‘கங்குவா’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. அக்டோபர் 20-ம் தேதி இதன் இசை வெளியீடு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள், நாடுகள் ஆகியவற்றில் படத்தினை விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
’கங்குவா’ படத்துக்காக அளித்த பேட்டியில் ஞானவேல்ராஜா, “500 கோடி, 700 கோடி என எவ்வளவு வசூல் செய்தாலும் அதன் ஜி.எஸ்.டி சான்றிதழை ட்வீட் செய்கிறேன். அதன் மூலம் உண்மையான வசூல் என்ன என்பது தெரிந்துவிடும். அதே போல் அடுத்துள்ள தயாரிப்பாளர்களிடமும் கேட்டீர்கள் என்றால் உண்மையான வசூல் தெரிந்துவிடும். ரூ.2000 கோடி வசூல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.