ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த சூர்யா.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு..

kanguva
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 3டியில் 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் ஆரம்பித்து கேரளா, சென்னை, ஹைதரபாத் என பல்வேறு இடங்களில் படக்குழுவினர் நிகழ்ச்சி நடத்தியிருந்தனர். surya

இதனைத் தொடர்ந்து மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியது படக்குழு. நிகழ்ச்சியில் சூர்யா, சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் சூர்யா நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்திருந்ததால் அங்கிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் சூர்யாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது தொடர்பாகவும் கோவமாக பேசினார். இது அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பின்பு சூர்யா அவருக்கு பொறுமையாக பதில் சொல்லிவிட்டு மேடை ஏறி தாமதமாக வந்ததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். பின்பு, “தாமதத்திற்கு மும்பை போக்குவரத்து காரணம் அல்ல. விமான போக்குவரத்து தான் காரணம்” என்றார். 

Share this story