சூர்யா தான் பாகுபலிக்கு இன்ஸ்பிரேஷன் ; சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த இயக்குநர் ராஜமௌலி !

rajamopuli

நடிகர் சூர்யாவின் 42ஆவது திரைப்படமான கங்குவா படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். இது தான் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் படமாகும். இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், கிச்சா சுதீப், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கங்குவா திரைப்படத்தின் டைட்டிலை, கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில் இப்படம் வரக்கூடிய நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 3500 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ரூ.350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களில் கங்குவாவும் ஒன்று. ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் 35 மொழிகளில் வெளியாகவுள்ளது.

கங்குவா திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தை புரமோட் செய்வதற்காக, படக்குழு ஊர், ஊராக சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் படக்குழு தெலுங்கில் படத்தை புரோமோட் செய்வதற்காக சென்று இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜமெளலி வந்திருந்தார்.


அப்போது பேசிய அவர், “நான் இங்கு வெளிப்படையாக பேச விரும்புகிறேன். தெலுங்கு சினிமா இன்று இப்படி மாறியதற்கு மிக முக்கியமான இன்ஸ்பிரேஷன் நடிகர் சூர்யாதான். காரணம், கஜினி படத்தின் போது, அந்தப்படத்தை புரோமோட் செய்ய அவர் இங்கே வந்திருந்த விதம், அது மட்டுமல்ல, அந்தப்படத்திற்காக அவர் செய்த இன்ன பிற விஷயங்கள் எங்களுக்கு ஒரு படத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு படிப்பினையாக அமைந்தது. அந்த படிப்பினையை தெலுங்கு நடிகர்களும், தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் எடுத்துக்கொண்டோம். பாகுபலி திரைப்படத்தை நான் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷன் சூர்யாதான்.” என்றார்.

இதைக்கேட்ட சூர்யா, மேடைக்கு வந்து ராஜமெளலியை கட்டியணைத்துக்கொண்டார். தொடர்ந்து அவர் முன்னே சூர்யா கைக்கட்டி நின்றார்.

அதனைத்தொடர்ந்து பேச ஆரம்பித்த ராஜமெளலி, “ சூர்யா நேர்காணல் ஒன்றில் பாகுபலி படத்தின் வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக கூறினார். உண்மையைச் சொல்லப்போனால், நான்தான் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பை மிஸ் செய்து விட்டேன். காரணம் எனக்கு சூர்யாவை அவ்வளவு பிடிக்கும். அவருடைய நடிப்பு அவ்வளவு பிடிக்கும். அவர் திரையில் தோன்றும் விதம் அவ்வளவு பிடிக்கும். பாகுபலி படத்தில் நான் நடிக்கவில்லை என்று நீங்கள் எடுத்த முடிவை நான் மிகவும் மதிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இயக்குநர் யார் என்பதை மீறி, கதை எப்படி இருக்கிறது என்று பார்த்தீர்கள்.” என்று பேசினார்.

Share this story