"பல வருடங்கள் கழித்தும் இப்படத்தை பற்றி மக்கள் பேசுவார்கள்"-சூர்யா பாராட்டிய படம்
வெங்கி அட்லூரி இயக்கிய ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற படம் வெற்றிபெற்று, 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், ‘இயக்குனரும், தயாரிப்பாளரும் தெலுங்கு மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். மமிதா பைஜு கேரளாவில் இருந்தும், ரவீனா டாண்டன் மகாராஷ்டிராவில் இருந்தும் வந்துள்ளனர். நாம் அனைவரும் வெவ்வேறு மொழிகளை பேசுபவர்கள். ஆனால், அந்த எல்லைகள் அனைத்தையும் நீங்கள் அழித்துவிட்டீர்கள். ‘இது ஒரு நல்ல படம். இது மனதிற்கு நெருக்கமான உணர்வு’ என்று சொல்லி, குடும்பக்கதையை ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் திரையரங்கிற்கு வந்து, ‘இது ஒரு முக்கியமான படம்.
இப்படிப்பட்ட படங்களை பற்றி பேசுவது மிகவும் முக்கியம்’ என்று நிரூபித்துவிட்டீர்கள். ஒரு படத்தின் வெற்றி என்பது, விற்பனையாகும் டிக்கெட் எண்ணிக்கையிலோ அல்லது வசூல் கணக்கிலோ இல்லை. படம் முடிந்து வெளியே வரும்போது மக்கள் பேசும் பேச்சுகள், அவர்களின் மனதில் தங்கும் உணர்வுகள், அவர்களின் கண்ணீர் மற்றும் சிரிப்பில்தான் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. நிச்சயமாக பணம் முக்கியம்தான். ஆனால், பல வருடங்கள் கழித்தும் இப்படத்தை பற்றி பேசுவார்கள். அந்த உணர்வுதான் மிகவும் முக்கியம்.

