தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ ட்ரெய்லர் ரிலீஸ்...!

tammanna

தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. 


தெலுங்கில் 2022ஆம் ஆண்டு வெளியான ‘ஓடேலா ரெயில்வே ஸ்டேஷன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘ஓடேலா 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய அஷோக் தேஜாவே இயக்கியுள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இப்படம் ஆன்மீகம் கலந்த திகில் ஜானரில் உருவாகியுள்ளது. 


இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் தமிழ் பதிப்பு டிரெய்லரில் கங்கைக்கு தெற்கு பகுதியில் ஓடேலா எனும் ஊரில் பிரேத ஆத்மா உருவெடுத்துள்ளதாக பின்னணி குரலில் சொல்லப்படுகிறது. ஆவியான தனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் பழிவாங்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பின்பு அதை விரட்ட சாமியராக தமன்னா வருகிறார். பின்பு இருவருக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் குறித்தான காட்சிகள் இடம் பெறுகிறது.  

டிரெய்லரில் இடம் பெறும் சில வசனம் தற்போது வைரலாகி வருகிறது. ‘நிக்கிறதுக்கு தேவை பூமாதா... நாம வாழுறதுக்கு தேவை கோமாதா’, ‘நீங்க வாழ மாட்டை கொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அதோட கோமியத்தை வித்து கூட பொழச்சுக்க முடியும்’ என தமன்னா பேசும் இடம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story

News Hub