“தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்துக்கு போக வேண்டும் ” - செல்வராகவன்
ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சொர்க்கவாசல். ஸ்வைப் ரைட் ஸ்டூடியோஸ் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இப்படத்தில் செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ள இப்படம் சிறை வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
கடந்த மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. காமெடி கலந்த கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஆர்.ஜே பாலாஜி இந்தப் படத்தில் சீரியஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் செல்வராகவன் பேசுகையில், “படத்தின் ஸ்கிரிப்ட் பார்த்து விட்டு எப்படி இது மாதிரி எழுத முடியும் என யோசித்தேன். படப்பிடிப்பு முடியும் வரை எப்படி எழுதினீர்கள் என ஸ்கிரிப் ரைட்டர்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். ரொம்ப கோவம் வந்தது. ஏனென்றால் எனக்கு இது மாதிரி எழுத வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் எழுதியிருப்பேன். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் எழுத முடியும் என இப்போது வரை என்னால் நம்பமுடியவில்லை. எதையும் மிகைப்படுத்தி சொல்லவில்லை. படம் பார்க்கும் போது உங்களுக்கு பிரியும். நல்ல படங்கள் வரவேண்டும், தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்துக்கு போக வேண்டும் என சொல்கிறோம். ஆனால் யாரும் புதிதாக எதுவும் எடுப்பதில்லை ஆனால் இந்தப் படம் ஒரு ஸ்பெஷலான படம். அதகுக்கு நான் கியாரண்டி. ” என்றார்.