தமிழ்நாட்டில் G.O.A.T FDFS எப்போது? ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

GOAT

விஜய் நடிப்பில் 'கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சிறப்பு காட்சி குறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார்.
 ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’கோட்’ (Greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. ரூ.400 கோடிக்கு மேல் மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகியுள்ள கோட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜயுடன் இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இத்திரைப்படம் துவங்கியது முதல் படக்குழு தொடர்ச்சியாக அப்டேட்கள் வெளியிட்டு வந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் முதல் மூன்று பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியான நிலையில், கடைசியாக வெளியான 'மட்ட' (Matta) பாடலை ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல், கோட் படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது எனக் கூறலாம்.

இந்நிலையில், கோட் படத்தின் முன்பதிவில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை முன்பதிவில் ரூ.15 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக, இந்தியன் 2 திரைப்படம் முன்பதிவில் படைத்திருந்த சாதனையான ரூ.11.20 கோடியை கோட் திரைப்படம் முறியடித்துள்ளது. இந்நிலையில், கோட் திரைப்படத்தின் முதல் காட்சி கேரளாவில் காலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பிராட்வே திரையரங்கில் காலை 7 மணிக்கு திரையிடப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோட் படத்தின் சிறப்புக் காட்சி குறித்து தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசுகையில், “கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசிடம் படக்குழு அனுமதி கோரியுள்ளது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு கோட் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக இந்தியன் 2, ராயன் படத்திற்கு காலை 9 மணி முதல் ஒரு நாளைக்கு 5 காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், கோட் படத்தின் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 

Share this story