நடிகை தனுஸ்ரீ தத்தா கொடுத்த பாலியல் வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

நடிகை தனுஸ்ரீ தத்தா கொடுத்த பாலியல் வழக்கை தள்ளுபடி செய்து அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ‘மீ டூ’ விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகர் நானா படேகர் மற்றும் மூன்று பேர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தார்.
மார்ச் 2008 மற்றும் அக்டோபர் 2010 இல் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு சம்பவங்களில் நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, ராகேஷ் சாரங் மற்றும் அப்துல் கனி சித்திக் ஆகியோர் தன்னை ஒரு இந்தி படப்பிடிப்பின் போது பாலியல் துன்புறுத்தல்கள் செய்ததாக நடிகை குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்திய ஓஷிவாரா காவல்துறையினர் எந்த குற்றமும் இல்லை என்றும் புகார்கள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர்.
இந்த இரண்டு வழக்குகளையும் அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு குறித்து பேசிய நீதிபதி என்.வி. பன்சால், “2008ல் நடைபெற்ற சம்பவத்திற்கு 2018 ஆம் ஆண்டு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு குற்றங்களுக்கும் குற்றவியல் விதிமுறைகளின்படி 3 ஆண்டு கால வரம்பு உள்ளது” என்றார். மேலும் “இரண்டாவது வழக்கு பொறுத்தவரை
அப்துல் கனி சித்திக் மீது எந்த முகாந்திரமும் இல்லை. இரண்டு வழக்குகளிலும் போதுமான ஆதாரங்கள் இல்லை மற்றும் காலாவதியாகிவிட்டது” எனக் கூறி தள்ளுப்டி செய்து உத்தரவிட்டார்.