நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா ‘டெஸ்ட்’? - புதிய சலசலப்பு
சசிகாந்த் இயக்கியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஓய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் ‘குவாட்டர் கட்டிங்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் சசிகாந்த். தற்போது அவரே தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘டெஸ்ட்’. இதில் மாதவன், சித்தார்த், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதுவரை கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இப்போது ‘டெஸ்ட்’ படத்தினை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் சசிகாந்த்.
இதற்கான உரிமையை பெரும் விலை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம். எப்போது வெளியிடலாம் என்று ஃநெட்ப்ளிக்ஸ் கொடுக்கும் தேதிக்காக காத்திருக்கிறார் சசிகாந்த். தேதி முடிவான உடன், அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். முன்னணி நடிகர்கள் நடித்துள்ள ஒரு படம் நேரடி ஓடிடி வெளியீட்டை தேர்வு செய்திருப்பதால், திரையுலகில் சிறு சலசலப்பு ஏற்பட்ட வாய்ப்பு இருக்கிறது.