’தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்... படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

vijay

நடிகர் விஜய்யின் கடைசி படமான ’தளபதி 69’ இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தினத்தன்று வெளியிடப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் கடைசி படம் ’தளபதி 69’ என அவர் முன்பே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்தார். அதனால் 'தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ’தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு குடியரசு தினத்தன்று வெளியாவதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கேவின் புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்த அப்டேட் பற்றி பலரும் இணையத்தில் எழுதி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற விவாதமும் நடைபெற்று வந்தது. vijay 69


இந்நிலையில் படத்திற்கு ’நாளைய தீர்ப்பு’ என தலைப்பு வைக்கப்படுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரைத்துறையினர் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. ’நாளைய தீர்ப்பு’ என்ற பெயரில் 1992ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம். எனவே அதனை நினைவுபடுத்தும் விதமாகவும் அவரது அரசியல் பயணத்தைக் குறிக்கும் விதமாகவும் இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கேவின் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில் ’தளபதி 69’ படமானது தெலுங்கில் வெளிவந்த நடிகர் பாலைய்யாவின் ’பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரிமேக் என்ற யுகமும் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இது தொடர்பாக பகவந்த் கேசரி திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி அவரது புதிய படமான ’சங்க்ராந்திக்கு வஸ்துன்னம்’ பட விழாவில் பேசியிருந்தார்.

இயக்குநர் ஹெச்.வினோத்தால் நடிகர் கமல்ஹாசனுக்கு சொல்லப்பட்ட கதைதான் தற்போது விஜய்யை வைத்து திரைப்படமாக உருவாகியுள்ளது என இதற்கு முன்பு பேசப்பட்டு வந்தது. ஆக மொத்தத்தில் இத்திரைப்படம் குறித்த யுகங்களும் எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Share this story