'தளபதி விஜய் பயிலகம்' தொடக்கம் - புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு !
‘தளபதி விஜய் பயிலகம்’ தொடக்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். ஏற்கனவே விஜய் கல்வி விருது, விலையில்லா விருந்தகம், விழியகம், குருதியகம் உள்ளிட்டவைகளை மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் பயிலகம் என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஜயின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.அந்நாளில் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை தங்களால் இயன்ற அளவில் செய்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 'தளபதி விஜய் பயிலகம்' ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.