ஷூட்டிங்கில் நடிகர் விக்ரமுக்கு விபத்து... விலா எலும்பு முறிந்ததால் அதிர்ச்சி !

vikram

 நடிகர் விக்ரமிற்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

vikram

இந்த படத்தில் நடிகைகள் பார்வதி மற்றும் மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ப்ரீயட் படமாக உருவாகும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடப்பா, சென்னை உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.‌ இதில் படப்பிடிப்பிற்காக நடிகர் விக்ரம் சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Share this story