ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த தங்கலான்!

Thangalan

 பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்த இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தங்கலான் திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தங்கலான் திரைப்படம் இந்தியில் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தங்கலான் திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



இந்த வருடம் தொடக்கம் முதல் தமிழ் படங்கள் அதிக அளவில் வசூலைப் பெறாததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். நடிகர் விக்ரம் தங்கலான் வெற்றியைக் கொண்டாடு வகையில் சில நாட்களுக்கு முன் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்தார்.

அரண்மனை 4, ராயன், மகாராஜா போன்ற சில திரைப்படங்கள் மட்டுமே இந்த வருடம் 100 கோடி வசூலைப் பெற்ற நிலையில், தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கலான் திரைப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story