தங்கலான் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்...!
ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரமின் தங்கலான் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.. . ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உருவாக்கத்தின் பின் பல மெனக்கெடல்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பா. ரஞ்சித் செதுக்கியுள்ளார்.
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதற்காக தனது 100 சதவீத மெனக்கெடலை கொடுப்பவர் விக்ரம். இந்த படத்தில் விக்ரம் கதாபாத்திரம் காண்போரை மிரட்டும் வகையில் அமைந்துள்ளது, பழங்குடியினரின் வாழ்வியல், அவர்களின் கலாச்சாரம் மற்றும் உடை என ஒட்டுமொத்தத்தையும் கண்முன் காட்டுகிறது விக்ரமின் கெட்அப். படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, சில நாட்களுக்கு முன் சென்னையில் கோலாகலமாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் ‘தங்கலான்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டிக்கெட் முன்பதிவிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று முதல் ‘தங்கலான்’ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.