“மாநாடு சிறப்பாக அமைய வேண்டும்” - எஸ்.ஏ.சந்திரசேகர்

vijay

விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. 


ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதோடு மாநாட்டுத் திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்தாலும் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. 

இந்த மாநாடு வெற்றி பெற வேண்டி த.வெ.க. தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவர் சத்தியமங்கலத்தில் இருந்து விக்கிரவாண்டிக்கு நடைபயணம் மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கொரட்டூரில் விஜய் கட்டிய சாய் பாபா கோயிலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா ஆகியோர் வழிபாடு செய்தனர். இதையடுத்து அங்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பின்பு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், “வருகிற ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் மாநாடு சிறப்பாக அமைய வேண்டும். எங்க தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். பெரிய நிலைமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும். இதை வலியுறுத்தி த.வெ.க. தொண்டர்கள் நமது சாய் பாபா கோயிலில் அன்னதானம் செய்துள்ளனர்” என்றார்.

Share this story