சந்தானம் நடிப்பில் 'DD Next Level' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

santhanam

நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த பாகமான ’டிடி நெக்ஸ் லெவல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
 

2023ஆம் ஆண்டு பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த ’டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சந்தானம் நடிப்பில் ஏற்கனவே வெளிவந்த ’தில்லுக்கு துட்டு’ படங்களின் வரிசையில் இது மூன்றாவது படம். இந்த படத்தில் சந்தானத்தோடு சுரபி, FEFSI விஜயன், பிரதீப் சிங், ’நான் கடவுள்’ ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனீஷ்காந்த், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்நிலையில் மீண்டும் பிரேம் ஆனந்த், சந்தானம் கூட்டணியில் ’டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படம் தொடர்பான அறிவிப்பிற்காக நேற்று காலை சந்தானம், ஆர்யா, கஸ்தூரி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் எதையும் குறிப்பிடாமல் வெறுமனே நெக்ஸ்ட் லெவல் எனும் போஸ்டரை பகிர்ந்திருந்தனர்.dd


என்னவாக இருக்கும் என ரசிகர்கள் சந்தேகித்த நிலையில் நேற்று மாலையே அது ’டிடி ரிட்டர்ன்ஸ்’ இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு எனவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 10 மணிக்கு வெளியாகும் எனவும் சந்தானம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதன்படி ’டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next Level) என பெயர் வைத்துள்ளனர்.அதில் DD என்பதற்கு DEVIL'S DOUBLE என விரிவாக்கம் கொடுத்துள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஆர்யாவும் சந்தானமும் இந்த படத்தின் மூலம் இணைகிறார்கள். நடிகர் ஆர்யா இந்த முறை இணைந்து நடிக்காமல் சந்தானத்திற்காக தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஆர்யாவின் தி பீப்பிள் ஷோ நிறுவனமும், நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.



சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் ஆர்யா வெளியிட்டுள்ளார். அதன்படி செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி சங்கர், யாஷிகா ஆனந்த் ஆகியோர் ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்துள்ளனர். ’டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்திருந்த ’நான் கடவுள்’ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன் ஆகியோரும் இந்த படத்தில் உள்ளனர்.

’டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படமானது வழக்கமான ஹாரர் காமெடி படங்களில் இருந்து மாறுபட்டு பேய்களிடம் இருந்து தப்பிக்க 4 லெவல் உள்ள விளையாட்டுகளில் கலந்துகொண்டு அந்த பேய் பங்களாவில் இருந்து தப்பிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதே போல அதன் இரண்டாம் பாகமான ’டிடி நெக்ஸ்ட் லெவல்’ அந்த விளையாட்டுகளின் அடுத்த லெவலாக இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story