“வேலைய விட்டுட்டு மாநாட்டுக்கு வரவன்தான் த.வெ.க. தொண்டன்” - ஆனந்த்

pussi anand

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியை கடந்த மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். 


அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் படு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், கடந்த 26ஆம் தேதி மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதையடுத்து தஞ்சாவூரில் கும்பகோணத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆனந்த்,  “முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக தொழிலை பார்க்க வேண்டும். அதில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமோ, இரண்டு சதவீதமோ மக்களுக்கு செலவு செய்ய எடுத்து வைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக் கூடாது. இப்படி சொல்ல கூடிய தலைவர் நம்ம தளபதி. 

நம்ம நிர்வாகி, வேலை பார்க்கும் முதலாளியிடம் அக்டோபர் 27 லீவ் கேட்டிருக்கிறார். அது எவ்ளோ முக்கியமான நாள் நீ லீவ் கேட்குற என முதலாளி கேட்க, அதற்கு நம்ம நிர்வாகி நான் உங்கிட்ட 18 வருஷமா வேலை செஞ்சிட்டு இருக்கன், அந்த ஒரு நாள் லீவு கொடுத்துடுன்னு சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், நீ லீவ் போட்டால் போனஸ் கொடுக்கமாட்டேன், வேலைய விட்டு தூக்கிடுவன்னு சொல்லியிருக்கார். நீ வேலைய விட்டு தூக்குனா என்ன, போனஸ் கொடுத்த என்ன, என் தலைவன் தளபதிய நான் பாக்கனும், உன் வேலையும் வேணாம் எதுவும் வேணாம், இப்படி உண்மையாக ஒரு தொண்டன் சொல்வான் என்றால் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டன் மட்டும்தான்” என சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Share this story