"அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது....” மும்மொழிக் கொள்கைக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து!

நடிகர் பிரகாஷ் ராஜ் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் முக்கிய குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் பிரகாஷ் ராஜ். தற்போது தமிழில் விஜய்யின் கடைசி திரைப்படமான ’ஜனநாயகன்’, சூர்யாவின் ’ரெட்ரோ’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளரும் பிரகாஷ் ராஜின் நண்பருமான கௌரி லங்கேஷ் சுடப்பட்டு இறந்தார். அதன் பிறகு திரைத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் பலவற்றையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளிலும் தனது கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்.
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க..
— Prakash Raj (@prakashraaj) February 21, 2025
எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க.
ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்..
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi #justasking
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் மும்மொழிக் கொள்கை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், “உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.” என கூறியுள்ளார். மேலும் கெட் அவு மோடி எனும் ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.
முன்னதாக பிரகாஷ் ராஜ் இந்தியாவில் நடந்து வரும் மகா கும்பமேளாவை விமர்சித்தும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறிப்பிட்டும் தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.