நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்ட 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம்

modi

12த் ஃபெயில் படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த விக்ராந்த் மாஸ்ஸி புதிதாக நடித்துள்ள திரைப்படம் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’. தீரஜ் சர்ணா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸியோடு ராஷி கண்ணாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். கடந்த மாதம் 15ஆம் தேதி வெளியான இப்படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்தது. அதாவது கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு அரசியல் உள்நோக்கத்தோடு இந்தப் படத்தை எடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அதே சமயம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது குஜராத் முதல்வராக இருந்து தற்போது பிரதமராக இருக்கும் மோடி, இத்திரைப்படத்தை பாராட்டி, “உண்மையை வெளி கொண்டு வந்துள்ள சிறந்த படம்” என தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். 

 modi
இந்தப் படத்திற்கு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இப்படம் இதுவரை ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தை பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பார்த்தார். இவர்களுடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை தனத் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, படக்குழுவினரின் முயற்சியை பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸி அண்மையில் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story